சென்னை: எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வில் இன்று (டிச.14) விசாரணைக்கு வந்தது.
அப்போது, CPCL நிறுவனம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் எவ்வளவு எண்ணெய் வெளியேறியது? எப்படி கலந்தது? 48 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்ட நிலையில், அதில் எண்ணெய் எவ்வளவு? தண்ணீர் எவ்வளவு? என்ற விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி, பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், எண்ணெய் கசிவு எப்படி நடந்தது என்பது தொடர்பான முழுமையான விசாரணை நடந்து வருவதாகவும், பல்லுயிர் தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அறிவியல் ரீதியிலான தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 625 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் தடுப்பாண்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், எண்ணெய் அகற்றும் பணி மிக வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், 33 டேங்கர்கள் மூலம் இதுவரை 7260 லிட்டர் எண்ணெய் எடுக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பயோ ரெமெடியேசன் (Bioremediation) மையத்திற்கு அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த எண்ணெய் கசிவு 20 டன் அளவிற்கு மணலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், எண்ணெய் அள்ளும் பணியில் 75 படகுகள், 4 ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எண்ணெய் அகற்றி இயல்பு நிலைக்கு மீட்கும் நடவடிக்கைக்கு யார் அறிவியல் ரீதியிலான ஆலோசனை வழங்கினாலும், அதனை ஏற்க தயாராக உள்ளதாகவும், தனி நபராக ஒருவர் மனுத் தாக்கல் செய்து மெத்தனமான அறிவியல் ரீதியிலான நடவடிக்கையை கேள்விக்குறியாக்குவதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தீர்ப்பாய உறுப்பினர்கள் எண்ணெய் பரவாமல் தடுப்புகள் அமைத்தது மட்டுமே திருப்தி அளிக்காது என்றும் எண்ணெய் அகற்றும் பணிகள் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தற்போது வரையில் அகற்றப்பட்டதாக சொல்லப்படும் எண்ணெய் அளவு உள்ளிட்டவை திருப்தி அளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், எண்ணெய் படர்ந்த பகுதிகளைக் கணக்கிடுவது, அறிவியல் பூர்வமாகப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, அதன்பின்னர் தண்ணீரில் ஏற்படும் நச்சுத்தன்மையை சரிசெய்வது போன்றவை குறித்து தெரிந்து கொள்வதற்காக மெட்ராஸ் ஐஐடி-யிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது உறுப்பினர்கள் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்கிம்பர்களை பயன்படுத்தவில்லை, ஏன் போதுமான எண்ணெய் உறிஞ்சும் மற்றும் அகற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியபோது, எண்ணெய் அதிகம் தேங்கி உள்ள ஒரு கிலோ மீட்டர் பகுதிகளில் எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் கொண்டு எண்ணெய் அகற்றப்படுகிறது. மீதமுள்ள 10 கிலோமீட்டர் பகுதியில் மிகக் குறைவான அளவில் தண்ணீரில் எண்ணெய் கலந்துள்ளதால் அதனை எண்ணெய் உறிஞ்சும் அட்டை மூலம் அகற்ற முடியாது என்றும், மாற்று உபகரணங்கள் கொண்டு அகற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது மட்டும் அல்லாது வரும் டிச.17 எண்ணெய் அகற்றும் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்படும் என்றும், எண்ணெய் முழுவதுமாக அகற்றுவதற்கு 20ஆம் தேதி வரை அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தீர்ப்பாய உறுப்பினர்கள், டிச.17 ஆம் தேதிக்குள் எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து, டிச.18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி திருச்சியில் கைது!