சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம், கோயம்பேட்டில் தற்போது இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை என்பதாலும், அடுத்தகட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கும், தற்போதுள்ள மெட்ரோ ரயில் தடத்திற்கும் மையப்பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3.90 லட்சம் சதுர அடியில், 365 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமை அலுவலகம் கட்டும் பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
"சி.எம்.ஆர்.எல் பவன்" என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தில், 12 மாடிகளுடன் ஒரு கட்டடமும், தலா ஆறு மாடிகளுடன் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
இதில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்- பணியாளர்களின் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கான வாடகை தளம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த அலுவலகத்தில் மெட்ரோ ரயில் இயக்கம், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் 'கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள்' விரிவுப்படுத்தப்பட்டு செயல்பட உள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதால், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் ஓரிரு நாட்களில் திறக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.