தமிழகம் முழுவதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகன தணிக்கைகளும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து தணிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து விதியை மீறுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற குழப்பம் பொதுமக்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில் தற்போது சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே, வாகன தணிக்கையிலும், அபராதம் வசூலிப்பதிலும் ஈடுபட வேண்டும் என்றும்; அதேபோல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நிலைக்கு கீழ் உள்ளவர்கள் வசூலிக்கக் கூடாது எனவும் திருத்தி அமைக்கப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் கீழ் உள்ள சோதனைச் சாவடிகள் தவிர, மற்ற இடங்களிலும் வாகன தணிக்கை மேற்கொள்ளலாம் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் புதிய அபராத கட்டணங்கள் வெளியிடப்படவுள்ள நிலையில் தற்போது இதற்கான அரசாணை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.