சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் பற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல வாரியம் விசாரணை மேற்கொண்டது. விக்னேஷின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடமும் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹெல்டர் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை சித்திரவதைக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், ” சிறையில் இருக்கும் சுரேஷின் அம்மாவை விசாரித்தனர். விக்னேஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்த்தவர் இல்லை என்று காவல் துறையினர் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தொடர் விசாரணையில் அவரது சாதிச்சான்றிதழை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஒப்படைத்தோம். சாதி சான்றிதழை சரிபார்த்து ஆணையம் ஒப்புக்கொண்டுவிட்டது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து பயமுறுத்த விக்னேஷ் வீட்டிற்குச் செல்கின்றனர். விக்னேஷ் குடும்பத்தினர் பாவப்பட்டவர்கள், அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் முதற்கட்ட விசாரணையில் எங்களுக்கு முழு திருப்தி அளித்துள்ளது. மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியதும் காவல்துறை கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிடுவோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமனம் - பின்னணி என்ன?