திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ளது அறம் வளர்த்த நாயகி அம்மன் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் 1982ஆம் ஆண்டு நடராஜர் ஐம்பொன் சிலை உள்பட நான்கு சிலைகள் காணாமல்போனது.
இதுதொடர்பான வழக்கை உள்ளூர் காவல் துறையினர் விசாரித்துவந்த நிலையில், இந்தச் சிலை தொடர்பான வழக்கை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக் குழுவினர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். குறிப்பாக, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.
அந்தச் சிலை அரசின் உதவியோடு மீட்டுக் கொண்டுவரப்பட்டு கடந்த 13ஆம் தேதி சென்னை வந்தடைந்தது. இந்நிலையில், நேற்று கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டது. அங்கு முழுமையான ஆய்வுகளும் அளவீடுகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோயில் நிர்வாகத்திடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து பலத்த பாதுகாப்போடு தென்காசி வழியாக அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வந்தடைந்த சிலை, 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.
இதற்கிடையே, 37 ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊர் வந்த நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி மக்கள் மலர்த்தூவி மேளதாளங்களுடன் வரவேற்றனர்.
இதையும் படிங்க: சிலைக் கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல் பரபரப்புக் குற்றச்சாட்டு