நாங்குநேரி எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை மே 27ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தார்.
இதனால் நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி ஜூன் மாதம் 14ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் இந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி காலியாக உள்ள தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுடன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையே அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழைக்காலம் என்பதால் செப்டம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.