சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற நளினி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய நளினி, "நீங்கள் வழக்கு குறித்து மக்களுக்கு தொடர்ந்து தெரிவித்ததால் தான் விடுதலை சாத்தியமானது. அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. தமிழ்நாடு மக்களின் அன்பிற்கு நன்றி. நாளை(நவ.14) முருகனை சந்திக்க இருக்கிறேன். எங்களுக்காக உயிர் கொடுத்தவர்களின் சமாதிக்குச் செல்ல வேண்டும். கலாம் நினைவிடத்திற்குச்செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
என்னால் முதலமைச்சருக்கு சிக்கல் வரக்கூடாது: அகதி முகாமிலிருந்து என் கணவரை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். என்னை வைத்து முதலமைச்சரை யாரும் சிக்கலில் சிக்க வைத்து விடக்கூடாது என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. எனவேதான், முதலமைச்சரை சந்தித்து நன்றி கூறுவதில் தயக்கம் உள்ளது.
பேரறிவாளன் விஷயத்திலிருந்து இதைக் கற்றேன். பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் கூற முயல்கிறேன். ஆனால், அதையும் யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. யாருக்கும் நிவாரணம்கூட கிடைக்கவில்லை என கேள்விப்பட்டேன். பிரியங்கா காந்தி அவர்கள் விருப்பப்பட்டால் நான் சந்திக்கத் தயார்.
எமர்ஜென்ஸி விசா கிடைத்தால் வெளிநாட்டில் உள்ள என் மகளைப் பார்க்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா முயற்சி மற்றும் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கையால்தான் நான் இப்போது வெளியே வந்து உள்ளேன். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி