பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவரின் இரு மகன்களுக்கும், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதில் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்ற காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து நக்கீரன் இதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டது.
இதன் காரணாமக பொள்ளாச்சி ஜெயராமன், நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, நக்கீரன் கோபாலை விசாரணைக்கு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் நக்கீரன் கோபால் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரது வழக்கறிஞர் சிவகுமார் இன்று ஆஜராகி விசாரணைக்கு மறுதேதி குறிப்பிடும்படி மனு அளித்துள்ளார்.