TamilNadu municipal corporation election: இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக சீமான் உட்பட 200 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2018ஆம் தேதி முதல் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்த சீமானுக்குப் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதைத் திரும்பப் பெறுவதற்காக இன்று (டிசம்பர் 28) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "200 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் கட்டிய கட்டடங்கள் எல்லாம் இன்னும் நிலையாக உள்ளபோது திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்து முற்றிலும் ஆட்சியாளர்களின் தவறுதான்.
மக்கள் குறித்து அரசு கவலைகொள்ளவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட், ஏழு பேர் விடுதலைக்குப் போராடிவிட்டு இப்போது ஆளுங்கட்சி ஆனபின் கண்டுகொள்ளாமல் மக்களை ஏமாளியாக்குகிறது, திமுக.
கரோனாவைக் காரணம் காட்டி நாகையில் தங்கள் பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதி மறுத்துவிட்டு, கோவையில் உதயநிதி கூட்டம் நடத்த மட்டும் அனுமதித்தது சரியா?.
தேர்தலுக்காக அளித்த பொய்யான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என மக்கள் நம்புவது முட்டாள்தனம். வரவுள்ள மாநகராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்" என்றார்.
இதையும் படிங்க: Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்