சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் மல்லிகா. இவரது மகன் பத்ரி நாராயணன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஐடி கம்பெனி ஊழியரான பத்ரி நாராயணன் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவைப் பார்ப்பதற்காகச் சென்னை வந்து வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று பத்ரி நாராயணன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனது ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது 2 முறை ஏடிஎம் பின் நம்பர் தவறாக பதிவிட்டதால் ஏடிஎம் கார்டு தானாகவே பிளாக் ஆகிவிட்டது. இந்நிலையில் பத்ரிநாராயணனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், உங்களது பான் கார்டு காலாவதி ஆகி விட்டதால், ஏடிஎம் கார்டை பிளாக்கிலிருந்து நீக்குவது கடினம் என கூறியுள்ளார்.
ஆகையால் உடனடியாக பான் கார்டை புதுப்பிக்க வேண்டும். மேலும் தான் அனுப்பக்கூடிய லிங்கை கிளிக் செய்து ஏடிஎம் கார்டு எண்ணைப் பதிவிட்டால் உடனடியாக பிளாக் நீங்கிவிடும் என்று சூசனமாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பத்ரி நாராயணன் அந்த லிங்க்கை கிளிக் செய்து வங்கி எண்ணையும் கொடுத்துள்ளார். பின்னர் உடனே பத்ரி நாராயணன் வங்கி கணக்கிலிருந்த 10 லட்சம் ரூபாய் தவணை முறையில் பறிபோகியுள்ளது.
பணம் போன அந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்ரி நாராயணன் உடனடியாக தனது வங்கி கணக்கை முடக்கி 10 லட்சம் பணம் பறிபோனது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் - முதலமைச்சர் ரங்கசாமி