சென்னை: சென்னை தாம்பரம் இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள், மின் மோட்டார்கள் மூலம் முழுவதுமாக அகற்றியதால், சுரங்கப்பாதை போக்குவரத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இதனால் தமிழத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் அதன் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் தண்டவாளம் அடியில் அமைக்கப்பட்டு உள்ள மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், மின் மோட்டார்கள் மூலம் இரவோடு இரவாக சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை அடுத்து சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இது மட்டுமில்லாமல் இனி வரும் நாட்களில் மழை பெய்தாலும், இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், இனிமேல் எவ்வளவு மழை பெய்தாலும் மேற்கு தாம்பரத்தையும், கிழக்கு தாம்பரத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை போக்குவரத்து தொடர்ந்து பயன்படுத்த முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி; தாம்பரம் அருகே தீவாக மாறிய குடியிருப்பு பகுதி.. கைகுழந்தைகளுடன் வெளியேறும் மக்கள்!