2009ஆம் ஆண்டு இலங்கை இறுதிப்போரில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் மே 17, 2020 அன்று உலகம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை ஒன்று கூடல், பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம், உள்ளரங்கக் கூட்டம் என பல வடிவங்களில் நடத்தப்பட்டுவந்த இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், கரோனா பரவல் காரணமாக அவரவர் வீடுகளில் நேற்று நடைபெற்றன.
நேற்று மாலை 6 மணியளவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்தினரோடு, கோவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கோரிக்கை பதாகைகள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி, சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, வணக்கம் செலுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுசெயலாளர் கொளத்தூர் மணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி, திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக் நாதன் உள்ளிட்டோர் அவரவர் வீடுகளில் சுடர் ஏற்றி, வணக்கம் செலுத்தினர்.
மனித உரிமை ஆர்வலர்கள், திராவிட தமிழ்த் தேசிய இயக்க ஆர்வலர்கள் என பலரும் தமிழ்நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, தஞ்சை, திருவாரூர், கோவை, குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதையும் படிங்க : 'பரீட்சை என்பதே மன உளைச்சல் தான்' - நடிகர் விவேக்