சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப். 15ஆம் தேதி முதல் காணவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், சிபிசிஜடி போலீசார் முகிலனை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், திருப்பதி ரயில்நிலைய போலீசார் முகிலனை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், சென்னை கொண்டுவரப்பட்ட முகிலனிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து, ராயபுரத்தில் உள்ள பெருநகர இரண்டாம் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் முகிலனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, முகிலன் நீதிபதியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், வேண்டும் என்றே தன்னை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முகிலனை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கடத்திச் சென்று பல்வேறு விதமான ஊசிகள் உடலில் செலுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல், கடத்தப்பட்டபோது நடந்தவற்றை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிப்பேன் என கூறிய முகிலன், தன்னுடைய கடத்தலுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகமும், தமிழக அரசும் முழு பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.
மேலும், செய்தியாளர்கள், தமிழ்நாட்டு மக்களால் தான் உயிரோடு இருப்பதாகவும் முகிலன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.