சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரம் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் நாசிரா. நான்கு வருடங்களுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகியோருடன் ஒட்டேரி பகுதியில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகனான முன்னா (27) அயனாவரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்திலேயே முன்னா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அயனாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இன்று சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த முன்னாவின் தாய் நாசிரா, தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகன் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறை தரப்பிலும், மாநகராட்சி தரப்பிலும் கூறுவதாகவும், தனது மகனுக்கு இதுவரை எந்த பிரச்னையும் இருந்ததில்லை எனவும் கூறினார்.
அதேபோல், கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்திருந்தும், அடையாள அட்டை, பணி ஆணை உள்ளிட்டவைகள் மாநகராட்சியில் இருந்து வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
அதுமட்டுமின்றி, முன்னாவுக்கு தற்கொலை எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை எனக்கூறிய அவர், இன்னும் இரண்டு மாதங்களில் அவர் பணி நிரந்தரம் செய்யப்படவிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடந்து ஒரு வாரகாலத்திற்கு மேலாகியும் இதுவரை காவல் துறையினர் எனது மகனின் உடற்கூராய்வு சான்றை கூட வழங்கவில்லை. இதனால் தான் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நாசிரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனை காரணமாக பெண், குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை