சென்னை: சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அருகே வசித்து வரும் அனந்தராமன் என்பவர் தென்மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது செல்ஃபோனுக்கு 12 ரூபாயில் மின்கட்டணம் செலுத்தலாம் என்று சலுகையுடன் கூடிய குறுந்தகவல் வந்ததாகவும், மின்வாரியத்தில் இருந்து வந்ததாக நினைத்து அந்த லிங்க்கை தொட்ட நிலையில், சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஹரீஷ் என்பவர் அளித்த புகாரில், தனது மனைவியின் செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கின் கேஒய்சி ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்காவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படும் - இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என குறுந்தகவல் வந்ததாகவும், அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடி செய்த பணம் கிரெடிட் ஆன வங்கிக் கணக்கை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, மோசடியில் ஈடுபட்ட ஹரியானவை சேர்ந்த மஞ்சித் சிங், நாராயண சிங் ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை குர்கான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, டிரான்சிட் வாரண்ட் மூலமாக சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Chennai Traffic: பெருங்களத்தூரில் கடும் நெரிசல்.. கார்களுக்கு மாற்றுப்பாதை!