திமுக பொதுச்செயலாளரும் பேராசிரியருமான க. அன்பழகன் (98) பிப்.24ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவரது உடல் நலம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டார்.
நேற்றும், இன்றும் அன்பழகனை காண சென்ற ஸ்டாலினிடம் அவரது உடல் நலம் குறித்த விவரங்களை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும், திமுக பொதுச்செயலாளர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. க. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதையறிந்த திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனை விரைந்துள்ளனர்.
மருத்துவமனையில் பேராசிரியர் க. அன்பழகன் சிகிச்சைப் பெற்றுவருவதால் தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘பிறந்தநாளன்று நேரில் வர வேண்டாம்’ - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!