இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுக்கடைகள் திறப்பை எதிர்த்து இன்று திமுக நடத்தியது அரசியல் போராட்டம் அல்ல; மக்களைக் காக்கும், சமூகப் பாதுகாப்புப் பிரச்னைக்கான போராட்டம். அதனால் தான் அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாட்டு மக்களும், பெரும் எண்ணிக்கையிலான மகளிரும் கறுப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை அதிமுக அரசுக்கு தெரிவித்துள்ளார்கள்.
”கரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்” என்று மக்கள் எழுப்பிய முழக்கங்களின் பேரொலி, கோட்டையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சரின் காதுகளில் நிச்சயம் எதிரொலித்து பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கும்.
இந்தப் பேரிடரிலிருந்து தமிழ்நாட்டால் மீள முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளை, திட்டமிடுதல்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தான் செய்ய வேண்டும். ”ஊடரங்கு அறிவித்துவிட்டோம், அதனால் கரோனா ஒழிந்துவிடும்” என்பது மிகமிகப் பிழையான எண்ணம்.
நோய்த் தொற்று எங்கிருந்து பரவுகிறது, எப்படி பரவுகிறது என்ற அறிவியல் ரீதியான ஆய்வு நோக்கமும், ஆக்கப்பூர்வமான திட்டமிடுதலும், ஆர்வமும் இருந்திருந்தால், ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு சந்தையிலிருந்து, பல மாவட்டங்களுக்கும், வேறு மாநிலத்திற்கும் பரவிய நோயை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்.
மேலும் மதுக்கடைகளைத் திறப்பது, சமூகத் தொற்றை எற்படுத்தி பரப்பும் எனத் தெரிந்தும், அரசு இதைச் செய்வது, மக்கள் நலனை மறந்த, பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
எதைக் கேட்டாலும் அரசின் நிதி நிலைமையைக் காரணம் காட்டுகிறார்கள். மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்; மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விவரங்களும் அதில் குறிப்பிடப்பட வேண்டும்.
அதுதான் தொழில் துறையினர், இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது எதிர்கால தேவையை திட்டமிட உதவுவதாக இருக்கும். பொருளாதாரத்தை மீட்க வழியில்லாத இந்த அரசுக்கு தெரிந்த ஒரே வழியாக மதுபானக் கடைகள் மட்டுமே இருப்பது அவமானமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.