சென்னை: காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாதத்திலும் சரிவர காவிரி நீரை திறந்து விடாததால் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் பலரும் பல ஆண்டுகளாக வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை நடந்தி வருகின்றன. இதில் அவ்வப்போது அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படும் அவலங்களும் நிகழ்கின்றன.
மத்தியில் இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு காவிரி நீர் பிரச்சனை தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனையாக இருக்கும்போது, எவ்விதமான நிபந்தனையும் இல்லாமல் தங்களது முழு ஆதரவையும் அம்மாநில தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் வழங்கியது, அனைவருக்கும் தெரிந்ததே.
இதனைக் கண்டு, இனிமேல் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் பருவம் தவறாமல், கிடைக்கும் எனவும்; இதன் மூலம் காவிரி போராட்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைத்து விட்டதாகவே தமிழ்நாடு டெல்டா விவசாயிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கு, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னர் நடந்த, கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவையும், டி.கே.சிவக்குமாரையும் மகிழ்ச்சியில் கட்டி ஆரத்தழுவிய விதம் காங்கிரஸ் - திமுக இடையே உள்ள நட்பை வெளிப்படுத்தியது அம்மாநில காங்கிரஸாரையே வியப்பில் ஆழ்த்தியது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறிய நிலையில், காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் காவிரி நீரை திறந்து விட தங்களை வற்புறுத்த முடியாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 2023, ஆக.24-ல் பிரமாணப் பத்திரம் தாக்கல் ஒன்றையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் காவிரி நீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. டெல்டா உழவர்களுக்கு இந்த ஆண்டிற்கான தீர்வு தான் என்ன? காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வு சாத்தியமா? என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர், சங்கரநாராயணன் சுடலை மின்னஞ்சல் வாயிலான பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காகவே காவிரி நடுவர் மன்றம் துவங்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு தரப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தில் இறுதியும் செய்யப்பட்டுள்ளது.
உழவர்களுக்குப் பாசனத்திற்கு வேண்டிய நீர் கிடைக்கவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் வலியுறுத்தி, இதுவரை தண்ணீரைப் பெற்று வருகிறது. காவிரியில் தமிழ்நாட்டு உழவர்களின் தமிழ்நாட்டின் உரிமையை காப்பதில் எனது தலைமையிலான அரசு என்றும் உறுதியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!