சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு சுகாதாரத் துறை அலுவலர்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அவருடன் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது, "பிரேசில், சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் காணொலி மூலம் நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாட்டில் கரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. உலக நாடுகள் கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாட்டிடம் ஆலோசனை கேட்டது பெருமைக்குரியது.
கரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனை 6 மாதம் கழித்து செய்யப்படும். கூடிய விரைவில் கரோனாவிற்கான தடுப்பு மருந்து கிடைக்கும். கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை அதிகளவில் தடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் எனப்படும் தரமான பரிசோதனை மேற்கொண்டதால் கட்டுப்படுத்த முடிந்தது.
முகக்கவசம் அணியாத 10 லட்சம் நபர்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கரோனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் கரோனா பரவல் இல்லை எனஅலட்சியமாக இருக்க வேண்டாம். மழை காலங்களில் ஏற்படும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு 15 சதவீதம் குறைந்துள்ளது. பருவ மழை காலங்களிலும் பொதுமக்கள் தங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவப்படிப்பில் முதுநிலை, இளநிலை மாணவர் சேர்க்கையை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதலின் அடிப்படையிலும், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. சீட் பிளாக்கிங் என்பது ஒரு தனியார் கல்லூரியில் ஒரு மாணவருக்கு ஏற்பட்ட தகவலாக உள்ளது. அது சரி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி