சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவர்கள் போராட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து அரசின் நிலையை தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோளினை ஏற்று, காலையில் 1556 மருத்துவர்களும் மாலை வரை 604 மருத்துவர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர். போராட்டத்தில் நேற்றுவரை இருந்த 2160 மருத்துவர்கள் இன்று பணிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 16 ஆயிரத்து 475 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் நான்கு மணிவரை 2521 பேர் மட்டுமே கையெழுத்திடாமல் போராட்டத்தில் உள்ளனர். இவர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
மருத்துவர்களைப் பணியிடமாறுதல் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. ஆனால் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு 60 மருத்துவர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சில மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் முழுமையாகப் பணிக்குத் திரும்பியுள்ளனர். நாளை காலைக்குள் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். புதிய மருத்துவர்கள் நியமனத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதேபோல் பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் இடங்களைக் காலிப்பணியிடங்களாக அறிவிப்பதற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.
அரசின் நிலைப்பாடு என்பது பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது. அரசு மருத்துவர்களின் கோரிக்கையை மிகுந்த கனிவோடு பரிசீலித்து, அதுதொடர்பாக ஆலோசித்துள்ளோம். விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு விரும்பினால், மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகாரத்தில் இருப்பதால் மருத்துவர்களை மிரட்டக் கூடாது -சீமான்