சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேசுவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அருகதை இல்லை என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், ''2023ஆம் கல்வி ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவர்களுக்கு 235 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி தங்கள் கல்வியில் நன்கு படித்து முன்னேற்றம் அடைய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவது போல் கல்வி ஒன்றே யாரிடமும் இருந்து பிரிக்க முடியாத செல்வம்'' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு வருடம்தோறும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024ஆம் கல்வியாண்டில் ரூ.234 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன்.
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதி உள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை விற்று விடக்கூடாது என்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர்கள் விற்பதைத் தவிர்க்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அண்ணாமலை கூறி இருந்த கருத்திற்கு, ''பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். ஆனால், 15 ரூபாய் கூட இதுவரை செலுத்தவில்லை. இவ்வாறு எந்தத் தொகையும் செலுத்தப்படாத நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை'' எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.