சென்னை: தமிழ்நாட்டில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை போன்ற துறைகளுக்கு அமைச்சராக செயல்பட்டு வருபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, 18 மணி நேரத்திற்கு பின் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை: நேற்று (ஜூன்.13) காலை செந்தில் பாலாஜி வீடு அமைந்துள்ள மன்மங்கலம், கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரம், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு, கரூர் வெங்கமேடு சண்முக செட்டியார் வீடு, கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணியன் வீடு ஆகிய 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் சோதனையை துவக்கிய நிலையில், செந்தில் பாலாஜியின் உதவியாளர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள கார்த்திக் வீட்டிலும் சோதனை செய்தனர்.
செந்தில்பாலாஜி கைது: இன்று அதிகாலையில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வலியில் துடித்த அமைச்சரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படும் எனவும், இதயத் துடிப்பு சீராக இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்? : கைது நடவடிக்கையை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது. அதற்காக நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு உரிய அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மனைவி மனு தாக்கல்: இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முறையீடு செய்துள்ளார். அதில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளதாகவும், கைதுக்கு முறையான விசாரணை நடைமுறைகள் பின்பற்றவில்லை. ஆகையால் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறிய அந்த மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி முறையீடு செய்துள்ளார்.
அப்போது கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று (ஜூன் 14) பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தற்போது மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடும் படி அறிவுறுத்திய நீதிபதிகள், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கானது நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 நாட்கள் வரை செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படும் - மருத்துவமனை தகவல்