சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று (நவ.15) மாலை மருத்துவ பரிசோதனைக்காக சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதையடுத்து, மேலும் சில பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஒரு மாத காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு, ஜூலை மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர் மருத்துவர் கண்காணிப்பிலேயே இருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவருக்கு உடல் ரீதியான பிரச்னைகள் இருந்ததால், கடந்த மாதம் சில நாட்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் குழு அவரை முழுமையாக பரிசோதனை செய்தனர்.
அங்கு உடல் நலம் தேறியதை அடுத்து, மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாலும், லேசான நெஞ்சுவலி, முதுகு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வலி இருந்ததாலும், மீண்டும் புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை அழைத்து வரபட்ட செந்தில் பாலாஜிக்கு, அங்கு ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவரை இன்னும் சில பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்துச் சென்றனர்.
அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவினரால் இருதயவியல் பரிசோதனையானது செய்யப்பட்டது. மேலும், நாளை (நவ.17) செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட பல ஸ்கேன்கள் எடுக்கப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று (நவ.16) முழுவதும் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதுவரை சி.டி.ஸ்கேன் மட்டும் எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், இன்று மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பில்லை என்றும் நாளை வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை இதய நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாளை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட சில ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிப்காட்டிற்கு எதிராக போராடிய திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம்.. அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!