சென்னை: தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புதாரர்கள் இருக்கின்றனர். இன்று காலை 11 மணி நிலவரப்படி 1 கோடியே 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமும் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த மாதம் 31ஆம் தேதி வரை மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்தப் பணியானது நடைபெறாது. ஆகையால் சென்னையில் மக்கள் கூடும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருவகின்றனர்.
மின் வாரிய ஊழியர்களுடன் மின்வாரிய நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஊழியர்களின் எண்ணப்படி மின் வாரியத்தை செயல்படுத்த முடியாது. மேலும், அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த முன் வாரிய நிர்வாகம் தயாராக இருக்கிறது.
மின்வாரிய வருவாயை கடந்த ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் வரக்கூடிய துறையாக மாற்றி உள்ளோம். ரூ.13 கோடியே 71 லட்சம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. மின்வாரிய வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை தற்போது வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் ரூ.84 கோடி செலவு மிச்சமாகி, மின்சாரத் துறையை சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. 7 டிவிஷனில் புதைவட கம்பிகள் பதிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு வேலைவாய்ப்புகள்..! இதை மிஸ் பண்ணிடாதிங்க..