சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 11ஆம் வகுப்பு மாணவர்களை நேரடியாக பள்ளிகளுக்கு அழைக்கலாமா? பொது தேர்வில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து வரும் ஜனவரி 25ஆம் தேதி உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு தினமும் 80 சதவீதம் அளவிற்கு மாணவர்கள் வருகை இருக்கிறது. வழக்கமான நாட்களில் 80 முதல் 85 சதவீதம் வரை மாணவர்கள் வருகை இருக்கும் . ஆனால் தற்போதைய காலகட்டத்திலும் அதிக அளவு மாணவர்கள் பள்ளிக்கு வருவது அலுவலர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 25ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.