சென்னை: கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருபவர், செல்வராஜ். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் (ஆக.1) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சாலையில் விதிகளை மீறி திறக்கப்பட்ட மதுபான பாரில், சிலர் அருந்தி மது குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த காவலர் செல்வராஜ், அங்கிருந்த அனைவரையும் கண்டித்து வெளியேற்றியுள்ளார். இந்நிலையில் காவலர் செல்வராஜை, பார் உரிமையாளர் தேவராஜ்லு அலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
துரத்தியடித்து விடுவதாக மிரட்டல்
அப்போது தான் அமைச்சர் சேகர் பாபுவின் உறவினர் என்றும், அண்ணனுடைய பாரின் மீது கை வைப்பாயா? எனவும் தேவராஜ்லு காவலரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் 400 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் துரத்தி அடித்து விடுவேன் எனவும் காவலரை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேவராஜ்லு, அமைச்சர் சேகர் பாபுவின் உறவினர் என்பது உறுதியானது.
அவர் மீது தடையை மீறி மதுபான பார் திறந்ததற்காக, தமிழ்நாடு தடைச் சட்டம் 24இன் கீழ், கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் காவலரை மிரட்டியதற்காக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது காவலரை மிரட்டும் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் சிறுமி புகைப்படம்... மிரட்டிய முன்னாள் அதிமுக நிர்வாகி கைது!