சென்னை நந்தனத்தில் இயங்கிவரும் ஆவின் நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆவின் நிறுவனத்தின் மூலம் அரசு 26 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிவருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி இனிப்பு விற்பனை, 80 ஆயிரம் கிலோ விற்கப்பட்டது. அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
தென் மாவட்டங்களில் கலவரங்களை தூண்டிவிட்ட கட்சி திமுக. தேவர் ஜெயந்திக்கு சென்று அங்கு விபூதி கொடுத்தால் அதை வாங்கி தன்னுடைய உதவியாளரிடமோ அல்லது அருகில் இருக்கும் யாரிடமோ கொடுத்திருக்கலாம். அதைவிடுத்து கீழே தட்டிவிடுவது நாகரிகமற்ற செயல். நாத்திக கொள்கையை தவறாக ஸ்டாலின் பின்பற்றுகிறார்.
ஸ்டாலினுக்கு கடிதத்தில் எழுதி கொடுத்தால் மட்டும்தான் பேசத் தெரியும். துண்டு சீட்டுகளில் எழுதிவைத்து அதிமுகவை குற்றஞ்சாட்டி வரும் ஸ்டாலினுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தைரியம் இருக்கிறதா? என்னைப் போன்று தெருவில் வந்து பேச சொல்லுங்கள் அப்போது ஸ்டாலினை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளலாம் என்றார்.
மேலும் பேசிய அவர், காணொலி காட்சிகளில் வடநாட்டு வாத்தியார் எழுதிக் கொடுத்த கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்டாலினுக்கு, அதிமுகவை பற்றி குறை கூறும் யோகியதை இல்லை. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவர் பதவியை விரைவில் இழக்க போகிறார். எங்களுக்கு புழல் ஜெயில் என்றால் ஸ்டாலினுக்கு திகார் ஜெயில்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை சுக்குநூறாக உடைத்து ஆட்சி அமைக்க போவது அதிமுகதான். என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கும் சிறையில் பிடித்து போடுவேன் என்று சொல்பவர்களுக்கும் திகார் சிறை காத்திருக்கிறது.
தர்மத்திற்கு ஒப்பான நூல் மனுநூல். பாஜக, அதிமுகவின் கூட்டணி கட்சி. எனவே பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதற்கு எங்களுக்கு வலுவான காரணம் உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவை விரைவில் பாஜகவுடன் இணைத்து விடுவார்' - மாணிக்கம் தாகூர்!