சென்னை: அனைத்துப் பல்கலைக் கழங்களிலும் பொது பாடத்திட்ட முறையில் 75 விழுக்காடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பிஇ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டத்தில் 75 விழுக்காட்டை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பின்பற்றப்பட வேண்டும்.
25 விழுக்காடு மட்டுமே கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். நாம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் தமிழ், ஆங்கிலம் பாடத்தினை முழுவதும் பின்பற்ற வேண்டும். பாடத்திட்டக்குழு அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு தனியாக பாடத்திட்டத்தை வடிவமைக்கவில்லை. பேராசிரியர்களை கொண்டுத்தான் வடிவமைத்து உள்ளோம். துணைவேந்தர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து வரும் 21ஆம் தேதி துணைவேந்தர்களுடன் நடைபெறும் ஆலோசனையில் விவாதிக்கப்படும்” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உயர்கல்வி மனறத்தின் சார்பில் பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாதிரி பாடத்திட்டம் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பாடத்திட்டத்தை பல்கலைக் கழகங்கள் பின்பற்றி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பாடத்திட்டத்தில் 25 விழுக்காடு அவர்கள் பகுதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூன் 31ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயார் செய்துள்ள பாடத்திட்டத்தினை அனைத்து பல்கலைகழங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 75 விழுக்காடு நடத்த வேண்டும் என்றும் அப்போதுதான் அந்தப் படிப்புகள் பிற பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் படிப்பிற்கு இணையானது என சான்றிதழ் உயர்கல்வித்துறையால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாடத்திட்டம் தரமானதாக இல்லை என கூறி பல்வேறுத் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமி , உறுப்பினர் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதில், கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கருத்துகளை தெளிவாக எடுத்து வைத்தோம். முடிவாக தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் மாதிரி பாடத்திட்டம் மட்டுமே அனுப்பி உள்ளோம். அதை பல்கலைக் கழகம் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். எந்த முடிவும் அந்தப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டக்குழு (Board of Studies ) முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெளிவாக கூறியுள்ளது. மேலும் அதன் அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்கு தகவல் அனுப்பப்படும் எனவும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.
எனவே பழைய பாடத்திட்டத்தையே தொடர பல்கலைக் கழகங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்ததந்த பாடத்திட்டக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி!