சென்னை: கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பி.இ., பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ''பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது.
முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் மூன்று சுற்றுக்களாக நடைபெறும்.
துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து SCA to SC கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். மாணவ, மாணவியர் தங்களது கலந்தாய்வு சுற்றுக்கான விரிவான கால அட்டவணையினை www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 430 கல்லூரிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதில் உள்ள மொத்த இடங்கள் 2 லட்சத்து 14ஆயிரத்து 960. இதில் ஒற்றைச் சாளர முறையில் ஒரு லட்சத்து 57ஆயிரத்து 378 பேர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. கடந்த ஆண்டைவிட 3ஆயிரத்து 100 இடங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் அரசுப் பள்ளி 7.5 விழுக்காடு எண்ணிக்கை 11ஆயிரத்து 804, ஒதுக்கீட்டிற்கான இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் கடந்தாண்டை விட 236 இடங்கள் அதிகரித்துள்ளன.
தொழிற்கல்வி பயின்றவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 143 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு புதியதாக இரண்டு பாடப்பிரிவுகள் ECE (Advanced Communication Technology), ECE (VLSI Design and Technology) தொடங்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழிக்கல்வி மூலம் Civil Engineering பிரிவில் 390 இடங்களும் (13 கல்லூரிகள்), Mechanical Engineering - 360 இடங்களும் (13 கல்லூரிகள்) கற்பிக்கப்படுகின்றன.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், தமிழ் வழிக்கல்வி மூலம் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science and Engineering) 39 இடங்களும், Mechanical Engineering 44 இடங்களும் கற்பிக்கப்படுகின்றன. பொதுக் கலந்தாய்வு ஒவ்வொரு சுற்றும் 12 நாள்கள் நடைபெறுகிறது. முதல் 3 நாள்கள் மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 2 நாள்கள் மாணவர்கள் தங்களின் உத்தேச ஒதுக்கீட்டு ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இறுதியாக மாணவர்கள், தங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கான இடங்களை மாணவர்கள் உறுதி செய்த பின்னர் ஐந்து நாள்களுக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். கடந்தாண்டுகளில் 7 நாள்கள் அளிக்கப்பட்டது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் உத்தரவின்படி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்தாண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்து விட்டு, மருத்துவப்படிப்பிற்குச் செல்லும்போது ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் விரும்பிய கல்லூரி கிடைத்தால் மாற்றிக்கொள்ளலாம். கல்லூரி கட்டணத்தை திருப்பித் தர வேண்டும். கல்லூரி கட்டணத்தை வழங்க காலதாமதம் செய்யக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: MK Stalin: வருகிற 17-இல் பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!