சென்னை: ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் தலா 1.5 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை ’எல் அண்டு டி’ தனியார் நிறுவனம் மூலம் அமைக்க சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மூலம் பேசி முடிக்கபப்ட்டுள்ளது. முதலாவதாக ராயப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் படிப்படியாக தொடங்கப்படும். இந்த ஆக்சிஜனை உற்பத்தி நிலையம் மூலம் காற்றை உள்வாங்கி சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
கரோனா தொற்று நடவடிக்கை;
கரோனா தொற்று முதல் அலையில் சாதாரண படுக்கைகளே போதுமானதாக இருந்தது. தற்போது இரண்டாவது அலையில் அனைவருக்கும் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்பட்டது. தற்போது 70 ஆயிரம் புதிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு இந்த படுக்கைகள் அனைத்தும் நிரந்தரமாக இருக்கும்.
அதேபோல் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுவதாக ஐ.சி.எம்.ஆர்(ICMR) எந்தத் தகவலும் கூறவில்லை. ஆனாலும் அனைத்து அரசு பொது மருத்துவமனையிலும் கரோனா தொற்று சிகிச்சை சிறப்பு வார்டுகள் திறக்கப்படுகின்றன.
கருப்பு பூஞ்சை நிலவரம்;
தமிழ்நாட்டில் 1,737 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோயால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கறுப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி தெரிந்த உடனேயே நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும், தாமதிக்கக் கூடாது. இந்த நோய்கு 45 ஆயிரம் மருந்துகள் தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதுவரை 11 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளது. அதில் நான்காயிரம் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுன்றன. மருத்துவமனைக்கு வரும்போது கரோனா தொற்றுடன் வரும் நோயாளி, 15 நாள்கள் கழித்து இறக்கும் போது அவருக்கு தொற்று இல்லை என வருகிறது. எனவே அதன் அடிப்படையில் தான் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பெற்றோரை இழந்த குழந்தைகள்;
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமே அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெற்றோரில் தாய் அல்லது தந்தை இருந்தால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது.
உலக நாடுகளிடையே ’டெல்டா பிளஸ்’ கரோனா தொற்று பரவி வரும் சூழலில் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாடு வருபவர்களை கண்காணித்திட விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் 80 காவலர்கள் உயிரிழப்பு!