சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு கூடுதலாக 120 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள், ஆறு படுக்கைகள் கொண்ட கறுப்பு பூஞ்சை வார்டு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக தொற்று ஏற்படும் மாவட்டங்கள் எவையென்று கண்டறிந்து அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். மேலும் கடந்த வாரம் சேலம், திருப்பூர், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அதன் விளைவால் தொற்று குறைந்திருக்கிறது.
தடுப்பூசி தொடர்பாக முதலமைச்சர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 18 வயது முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள், தொற்றின் அளவினைக் குறைத்தல் ஆகியவை குறித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறோம்.
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக மிகப்பெரிய அளவில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ அலுவலர்கள் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்கின்றனர். இந்த வயதிக்குள்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதன்விளைவாக 27ஆம் தேதி ஒரே நாளில் 3.23 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிக அளவில் உள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனை தமிழ்நாட்டில் 276 இடங்களில் ஒரு நாளைக்கு 1.70 லட்சத்தைக் கடந்து செய்யப்படுகிறது. கரோனா தடுப்பு பணிகளை அதிமுகவினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதிமுக ஆட்சியில் 230 மெட்ரிக் டன்னாக ஆக்ஸிஜன் இருந்தது. இன்றைக்கு ரோர்கெலா, துர்காபூர், ஜம்செட்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் பெறப்பட்டு தற்போது இருப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியிலே ஒரு வார காலம் முகாமிட்டு, தமிழ்நாட்டிற்குத் தேவையை ஆக்ஸிஜனை கேட்டுப் பெற்றுள்ளார். ஆகையினால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற முன்னாள் முதலமைச்சரின் பேச்சு தவறானது" என்றார்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?