சென்னை: தமிழக சட்டப்பபேரவையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 21 ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பை கட்டி முடிக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ சேவையை தொடர்ந்து முதலமைச்சர் தொடக்கி வைத்து வருகிறார்.
11 மருத்துவ கல்லூரிகளில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளும் 500 படுக்கைகளுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 18 மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது 28 அரசு தலைமை மருத்துவமனைகள் இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட கொண்டுவரப்படவில்லை எனவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 60 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், வருமுன் காப்போம் திட்டம் என அனைத்து திட்டங்களும் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தான் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 1 கோடியே 26 லட்சம் பேர் பயன்பெற்று இருப்பதாக கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் பன்நோக்கு மருத்துவமனை 1000 படுக்கையுடன் உடன் கூடிய சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 293 மருத்துவ சேவை வழங்கும் 108 வாகனங்கள் இயங்கி வருகிறது. அதேபோல, 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 12 கோடியே 18 லட்சம் செலவில் 28 டிஜிட்டல் எக்ஸ்ரே உடன் இயங்கக்கூடிய காசநோய் சிகிச்சைக்கான வாகனங்கள் செயல்பட்டு வருகிறது என்றார். மேலும், தமிழகத்தில் புற்றுநோய்க்கு என்று 230 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி காஞ்சிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் விரைவில் வர உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - அண்ணாமலை