சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறக்கூடிய மகளிர் உரிமை மாநாட்டில் 95 சதவீதம் மகளிர் கலந்து கொள்ளவுள்ளதால், அவர்களுக்கான தனிச்சிறப்பு வசதிகள் செய்யபட்டுள்ளது என்றும், குறிப்பாக தாய்மார்களுக்கு பாலூட்டும் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிரணி சார்பில், ‘மகளிர் உரிமை மாநாடு’ இன்று (அக்.14) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகளிர் உரிமை மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மகளிர் உரிமை மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. பிரமாண்ட வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இந்தியா கூட்டணியில் உள்ள அகில இந்திய மகளிர் தலைவர்கள் வருகை தர இருக்கிறார்கள். மழை வந்தாலும் 50 ஆயிரம் மகளிர் அமர்ந்து, மாநாட்டின் கருத்துகளை கேட்கிற வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை இல்லையென்றால் மாநாட்டு பந்தலின் வெளியில் கூடுதலாக 15 ஆயிரம் இருக்கைகள் போடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஒரு லட்சம் மகளிர் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் இந்த மாநாட்டில் எந்தெந்த கட்சிகளின் மகளிர் தலைவர்கள் வருகிறார்களோ, அவர்களின் கட்சிக் கொடிகள் 50 அடி உயரம் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், 50 அடி உயரக் கம்பங்கள் 50 எண்ணிக்கையில் இந்த மாநாட்டு பந்தலைச் சுற்றி போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கலைஞர் நூற்றாண்டு விழா என்பதால், கருணாநிதி உடனான தேசியத் தலைவர்கள், அவர்களுடைய சமுதாய பங்களிப்பு போன்ற பல்வேறு செய்திகளை விளக்குகிற வகையில் 400க்கும் மேற்பட்ட பதாகைகள் மாநாட்டு பந்தலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டரை ஆண்டு கால சாதனைகள், குறிப்பாக மகளிர் திட்டங்கள் குறித்தான சாதனைகள் பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மாநாட்டில், 95 சதவீத மகளிர் பங்கேற்பதால் 50 எண்ணிக்கையில் கழிப்பிட வசதிகள், 5 எண்ணிக்கையில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வருகிற மகளிர் தலைவர்களுக்கு மேடையிலேயே பசுமை அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசியத் தலைவர்களுக்கு சிறுதானிய பலகாரங்கள் மாலையில் வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் அமைக்கப்பட்டிருக்கிற 50 ஆயிரம் இருக்கைகளிலும் ஒரு பழச்சாறு பாக்கெட், தண்ணீர் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, 10 இடங்களில் ஆயிரம் லிட்டர் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டில் பசுமையாக வரவேற்கும் வகையில், வருகிற வழியெங்கும் 3 ஆயிரம் வாழை மரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்கு வருகை தர ஐந்து வழிகள் இருக்கிறது.
இந்த மாநாட்டுத் திடலின் பின்புறம் ராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு அவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஒய்.எம்.சி.ஏவுக்குச் சொந்தமான 6 இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்களின் வாகனங்கள் மாநாட்டு பந்தலுக்கு இடப்புறம் தனியே ஒரு மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு மாநாட்டு பந்தலை அடையலாம். அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு மேடையின் வலதுபுறம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநாட்டு மேடையில் முதல்வர் உள்ளிட்ட 10 பேருக்கும் மேடையின் அருகிலேயே வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் எந்த வித சிரமும் இன்றி பங்கேற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநாடு சரியாக 5 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. அதற்கு முன்னர் ஒரு மணிநேரம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாடகர்கள் மாலதி, சின்னப்பொண்ணு, மகழினி மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக மகளிர் உரிமை மாநாடு; சென்னை வந்த சோனியா காந்தியை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!