தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும், அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
ராயபுரம் தொகுதி அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோரை அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக ராயபுரத்திற்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பட்டாசு வெடித்து அதிமுகவினர் வரவேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, " கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் இல்லாமல் இருப்பது எந்தவித பிரச்சினையும் இல்லை.
சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அதிமுக அரசு தான். பாபர் மசூதி பிரச்சினையின்போதும் தமிழ்நாடு அமைதி பூங்காவாகவே இருந்தது.
இஸ்லாமிய மதத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியை மதிக்கிறேன். முதலாளித்துவ கட்சி காங்கிரஸ் எனக் கூறிய அவர்கள் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் கொள்கை இல்லாமல் செயல்படுகிறார்கள்.
திமுக தலைமையிலான கூட்டணியில் பிரச்சினை இருக்கலாம், ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுக கூட்டணி முழு உருவம் பெறும்போது பலம் தெரியவரும்.
தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பதை அறிந்த சிறுசிறு கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: மதிமுகவுக்கு 6 தொகுதிகள் - உதயசூரியன் சின்னத்தில் போட்டி!