சென்னை: Minister Anbil Mahesh speech: நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்று வரும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அரசு உதவிபெறும் 24 பள்ளிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 88 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் ஐந்து ஆண்டுகள் முடித்து பதவிக்கான தகுதிப்பெற்று, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பத்து ஆசிரியர்களைப் பணி வரன்முறை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 78 பணியிடங்களை விரைவில் நியமனம் செய்ய விவாதிக்கப்பட்டது. அதேபோல் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 33 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் ஐந்து ஆண்டுகள் முடித்து பதவிக்கான தகுதிப்பெற்று தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 5 பணியாளர்கள் பணி வரன்முறை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 28 பணியிடங்களை விரைவில் நியமனம் செய்ய விவாதிக்கப்பட்டது.
திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 31 பள்ளிகளில் 4 பள்ளிகளில் நிர்வாகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளது. அதனை ஆராய்ந்து விரைவில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, பள்ளிகள், திருக்கோயில்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "திருக்கோயில்கள் சார்பாக நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் கட்டட பொறியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு முடிந்தபின் பள்ளி கட்டடங்களின் தன்மைக்கேற்ப பணிகள் தொடங்கப்படும். பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைக்கேற்ப வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Corona Treatment: கரோனா சிகிச்சை; வீடு திரும்பும் வடிவேலு?