சென்னை: புத்தக பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சி இன்று (ஜன.3) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ள நிலையில், கண்காட்சியின் ஏற்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில், 47வது புத்தக கண்காட்சி, இன்று மாலை 4.30 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ஆறு படைப்பாளர்கள் மற்றும் நூலகர் ஆகியோருக்கு, பபாசி கலைஞர் பொற்கிழி விருது, சிறந்த பதிப்பாளர் விருதுகளை வழங்க உள்ளார்.
புத்தக கண்காட்சி: எழுத்தாளர்களின் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், ஆண்டுதோறும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதில், குழந்தைகளுக்கான சிறுகதைகள் தொடங்கி, நாவல்கள், இலக்கிய நூல்கள், பிற மொழி படைப்புகள், வரலாற்று புதினங்கள் என அனைத்து விதமான புத்தகங்களும் கண்காட்சியில் விற்கப்படும்.
புத்தக கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள்: புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தக வாசிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான படைப்புகளை எளிதாக பெறுவதற்கு வசதியாக 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சியானது வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில், தினமும் மாலையில் எழுத்தாளர்களுடனான உரையாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது. பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என கூறப்பட்டுள்ளது.
நெட்வொர்க் சேவை: இன்று தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை, 19 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது, நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்களும், பிஎஸ்என்எல் வைஃபை சேவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கங்கள்: தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை பிரஸ் மற்றும் எல்எல்பி ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகள் மற்றும் பூவுலகின் நண்பர்கள், காக்கைக்கூடு, இயல்வாகை போன்ற சூழலியல் சார்ந்த அரங்கங்களும் புத்தக கண்காட்சியில் அமைக்கபடுகின்றன.
கைத்திறத் தொழில்கள்: தமிழ்நாடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்களின் உழைப்பினால் உருவாக்கப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த கைத்திறப் பொருட்களை, உலகம் முழுதிலிருந்தும் வருகை தரக்கூடிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பூம்புகார் சார்பில், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2 ஆயிரம் சதுர அடியில் அரங்கு அமைத்துள்ளது.
பங்குபெறும் நிறுவனங்கள்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென்று இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாடமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக்டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கின்றனர். மேலும், இதில் இல்லம் தேடிக் கல்வி இயக்கமும் பங்கேற்கின்றது.
மேலும், உலக அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India Private Limited ), பிரிட்டிஷ் கவுன்சில்( Bristish council), ஹார்பர்காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா(Harpercollines publishers india), சைமன் & ஸ்கஸ்டர் இந்தியா(Simon & Schuster india) ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. சிங்கப்பூரில் இயங்கும் தமிழ் பதிப்பகமும் பங்கேற்கிறது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. இதனால், இந்தாண்டு புத்தக கண்காட்சியை 50 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கண்காட்சியின் ஏற்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.