சென்னை: மிக்ஜாம் பயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000 (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது.
டோக்கன்கள் கிடைக்கப் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6,000 பெற்றுக் கொள்ளலாம். டோக்கன்கள் கிடைக்கப் பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.17) சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 10 மணிக்கு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கி நிகழ்வை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும். மேற்படி நிவாரணத் தொகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு கடைக்க ஏதுவாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் அல்லது ஆணையாளர் அலுவலகத்தில் இன்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை வெள்ளத்தால் சேதம் அடைந்த கல்வி மற்றும் அரசு சான்றிதழ்கள் பெறக் கட்டணமில்லா சிறப்பு முகாம்...