சென்னை: மேல்மா சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய அருள் ஆறுமுகத்தின் மீது, உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமைந்துள்ள மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக, 11 ஊராட்சிகளில் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம், பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், அவர்கள் மீது பதிவான 11 வழக்குகளின் அடிப்படையில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில், அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரைக் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கடந்த நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: குன்னூரில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்.. காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
அதைத் தொடர்ந்து, 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையைத் திரும்பப் பெற்ற அரசு, அருள் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை. இந்த நிலையில், தனது கணவர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus) தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர், “எந்த ஒரு தீவிர குற்றத்திலும் அருள் ஆறுமுகம் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில், மக்களைத் தூண்டினார் என்றும், நிலம் வழங்க முன்வருபவர்களைத் தடுத்தார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது” என குறிப்பிட்டனர்.
மேலும், 100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள் நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டனர். இதையடுத்து, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பான விவரங்கள், அதற்காக அரசு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை ஆவணங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக மழை வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்