சென்னை, சேத்துபட்டு சிக்னலில், காவலர்களுடன் வழக்கறிஞர் தனுஜா ராஜனும், அவரது மகளும் சட்டக் கல்லூரி மாணவியுமான ப்ரீத்தியும் கடுமையாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து தலைமைக் காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு காவல் துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஜாமீன் மறுப்பு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், புகார்கள் இல்லாமல் தானாக முன்வந்து தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.
மகளுக்கு மட்டும் நிபந்தனை முன் ஜாமீன்
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12179607_257_12179607_1624014763426.png)
இந்த நிலையில் வழக்கு இன்று (ஜூன்.18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தண்டபாணி, அவரது மகள் ப்ரீத்திக்கு மட்டும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தவறு செய்யக் கூடிய வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டுவர வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிக்கிய மற்றுமொரு வழக்கறிஞர்
இந்த வழக்கு தொடர்பாக வாட்ஸ் அப்பில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நீதிபதி இது குறித்து நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறையினரைக் கடுமையாகப் பேசிய பெண் வழக்கறிஞர்: வைரலாகும் காணொலி