சென்னை: தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3,500 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை தென்மண்டல வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன், “ஜனவரி, பிப்ரவரி மாதங்களை குளிர்கால மாதங்கள் என்று சொல்வோம். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் உள்ளது. அதேநேரம் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் உள்ளது.
ஒரே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும், அதிகபட்ச வெப்ப நிலைக்கும் வித்தியாசம் 10 டிகிரி உள்ளது. பகல் நேரங்களில் நீர் நிலைகள் மற்றும் தாவரங்களில் இருந்து நீர் ஆவியாகக் கூடிய சூழ்நிலையைப் பார்க்கிறோம். இரவு நேரங்களில் மேகங்கள் அற்ற சூழ்நிலை இருக்கும்போது, வெப்பநிலை 21 டிகிரியாக மாறும்போது நீர் துளிகள் காற்றில் உள்ள தூசிகளில் படிந்து காற்றின் வேகமும் இல்லாததால் இதுபோன்று மூடு பனி உருவாகிறது.
அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால், இன்னும் 5 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் மூடு பனி குறையும். வெயிலை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டை 3 நிலைகளாகப் பிரிக்கலாம். அவை கடலோரப் பகுதிகள், உட்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள். இவற்றில் கடற்கரை பகுதிகளில் கடற்காற்று வீசுவதால் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
உட்புற பகுதிகளில் இந்த காற்று வீசாததால் வெப்பம் அதிகமாக இருக்கும். மலைப்பகுதிகளை பொறுத்தவரைக்கும், வெப்பம் இயல்புக்கு குறைவாக இருக்கும். அந்த வகையில் பார்க்கும்போது, பிப்ரவரி இறுதியில் வரும் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை கவனித்து அறிவிக்கப்படும்.
நிலநடுக்கத்தை பதிவேடு செய்யும் கருவிகள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். எனவே நிலநடுக்கம் வருவதற்கு முன்பாக தெளிவாக கணிக்க முடியாது. எந்தெந்த பகுதிகளில், மண்டலங்களில் பாதிப்புகள் இருக்கும் என்பது அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ரிக்டர் அளவுகோலில் பாதிப்பு ஏற்படும்போது வானிலை மையங்கள் அவற்றை அறிவித்துள்ளன.
முன்கூட்டியே கணிப்பது இதுவரை இல்லை. வானிலை குறித்த அறிவிப்புகளை துல்லியமாக அளிப்பது குறித்து பல்வேறு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். முன்னதாக அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகள், துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 5 நாட்களுக்கு வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்