சென்னை: மருத்துவப் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்விற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. இதில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கலந்தாய்வு முதலில் நடத்தப்பட்டது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23ஆம் தேதி தொடங்கியது.
நிவர் புயல் காரணமாக, நவம்பர் 24ஆம் தேதிமுதல் 29ஆம் தேதிவரை மருத்துவக் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதிமுதல் இன்றுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இளநிலை மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது.
முதல்கட்ட கலந்தாய்வின் இறுதி நாளான இன்று ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இது தொடர்பாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் செல்வராஜன் அளித்த பேட்டியில், "எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்விற்கு 355 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் 90 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 42 இடங்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் 31 இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்விற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான பல் மருத்துவ இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம்: மாணவி போலி அழைப்புக்கடிதமும் கொண்டு வந்தது அம்பலம்