இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தது.
இதனை ஏற்று தற்பொழுது அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரேஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென 3,575 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 2,145 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக 1,430 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பாரத பிரதமர் அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.