சென்னை: மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து, மருத்துவ மாணவர்கள் தயாரித்த கையேட்டினை வெளியிட்டார். அதன் பின்னர் பேசிய அவர், “சென்னை மருத்துவக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.
நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நேற்று நடைபெற்ற பேருந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க செங்கல்பட்டு சென்றேன்; அதனால் தாமதமாகிவிட்டது. இந்த கல்லூரி பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. இந்தியாவில் 2-வதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக்கல்லூரி 1835ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையின் வயது 300 ஆண்டுகளுக்கு மேலானது. இந்த மருத்துவமனை இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் முதலிடத்தில் உள்ளது.
இந்த கல்லூரியில் பயின்றவர்கள் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருது பெற்று உலக அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களாக உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி செய்தார். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 10,825 பேராக உள்ளது.
அதில் அரசு ஒதுக்கீட்டு 6,143 இடங்கள் உள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் எம்பிபிஎஸ் 459, பல் மருத்துவம் 106 என மொத்தம் 565 பேர் தேர்வாகி உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக்கல்லூரி உள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் சென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள 250 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 35 இடங்களில் 32 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது. அவர்களில் 24 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் இடம் ஒட்டுமொத்தமாக 71 மருத்துவக்கல்லூரி உள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி கோர இருக்கிறோம். அதற்கான முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். அங்கேயும் மருத்துவக்கல்லூரி அனுமதிக்கப்பட்டால் இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கம்: திறந்து வைத்தார் முதலமைச்சர்