இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயக அமைப்புகளின் ஆணி வேர்களை அறுத்து வீசிவிட்டு மெல்ல மெல்ல பாசிச சர்வாதிகாரத்தைப் படற விடுவதற்கு மத்திய பாஜக அரசு முனைப்பாக இருக்கின்றது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தேசிய புலனாய்வு முகமைச் சட்டத் திருத்தம், மத்திய அரசுக்கு தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் ஏதேச்சாதிக்காரத்திற்கு வழி வகுத்துள்ளது கண்டனத்துக்கு உரியது. என்ஐஏ சட்டத்திருத்தத்தில் வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்கானப் பட்டியலில் ஆள்கடத்தல், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்தல், வெடி பொருட்கள் சட்டம் 1908ன் கீழ் வரும் குற்றங்கள், கள்ள நோட்டு அச்சிடுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.
இனி தேசிய புலனாய்வு முகமைதான் இந்த குற்றச் செயல்களைப் பற்றி விசாரணை செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும். மேற்கண்ட குற்றங்களைத் தடுக்க மாநில அரசுகளுக்கு உள்ள சட்ட அதிகாரங்களைப் பறித்துவிட்டு, மாநில காவல்துறை தலைவருக்குக்கூட தகவல் கொடுக்காமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டு இருப்பது மட்டுமல்ல... சட்டம் ஒழுங்கு பராமரிப்பும்கூட இனி என்ஐஏ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
சிறுபான்மையினத்தவர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்களைக் கடுமையாக ஒடுக்கவும், என்ஐஏ சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அபரிமிதமான அதிகாரத்தை அளிக்கிறது. என்ஐஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்புக் குரல் வலுப்பெற்று வரும் நிலையில், ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இல் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது பாஜக அரசு.
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவுகள் 13, 16 மற்றும் 27 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே அழித்து ஒழிக்கும் வகையில் இருக்கின்றன. மத்திய முதன்மை தகவல் ஆணையர்களாகவும், தகவல் அலுவலர்களாகவும் நியமிக்கப்படுவோரின் ஊதியம், பணிக்காலம் நிர்ணயம் போன்றவற்றை மத்திய அரசே தீர்மானிக்கும் என்று சட்டத் திருத்தம் கூறுகிறது. இனி மத்திய அரசின் தயவில்தான் தகவல் ஆணையர்கள் பணியாற்ற வேண்டுமே தவிர, சுயேச்சையாகச் செயல்படுவதற்கு கடிவாளம் போடப்பட்டு இருக்கிறது.
மாநில தகவல் ஆணையர்களுக்கு ஊதியம் வழங்குதல், பதவிக் காலத்தை நிர்ணயித்தல் போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வழி வகுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு தட்டிப் பறிக்கிறது. இந்திய ஜனநாயக அமைப்பில் குடிமக்களுக்கு அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை கேள்வி கேட்கவும், சீரிய முறையில் இயங்கிடச் செய்யவும் வாய்ப்பு அளித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பாஜக அரசு நீர்த்துப்போகச் செய்திருப்பதும், கேள்வி கேட்பாரின்றி சர்வாதிகார ஆட்சி நடத்த முயற்சிப்பதும் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்ஐஏ சட்டத் திருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.