எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அரசு ஒதுக்கீட்டில் ஆயிரத்து 517 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில்,
இன்று (டிச. 9) நடைபெற்ற கலந்தாய்வில் 591 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் 459 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர், 132 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வரவில்லை.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 102 இடங்களையும், பி.டி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 12 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 27 இடங்களையும் என 197 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 266 மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டினை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 317 காலி இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 212 காலி இடங்களும், பி.டி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 66 காலி இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 922 காலியிடங்களும் என ஆயிரத்து 517 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு டிசம்பர் 14ஆம் தேதிவரை நடைபெற உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
மேலும், அனைத்து இந்திய மருத்துவ படிப்புக்கான இடங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 132, பிடிஎஸ் படிப்புக்கு 29 இடங்கள் திரும்பியுள்ளதால் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர வரும் மாணவர்களுக்கு கூடுதலாக 7.5 சதவீதம்வரை இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.