கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் ''குருஷேத்ர'' நிகழ்ச்சிக்கான லோகோவை சந்திராயன் திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொறியியல் பட்டப்படிப்பு பயில்வதால் தொழில் முனைவோராகவோ, அறிவியல் பணிக்கோ செல்வதையும் தாண்டி, சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் வளரும். இது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக அமையும். மாணவர்கள் நான்கு ஆண்டுகள் நன்றாக படித்தால் நன்கு திறமையானவர்களாக வளர முடியும்.
ஒரு நாடு வளர்ந்த நாடாக இருந்தால் அதற்கு அங்குள்ள பொறியாளர்களின் பங்களிப்புதான் காரணமாக உள்ளது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளை உணர்ந்து அதற்குத் தன்னால் என்ன தீர்வு அளிக்க முடியும்? என்பதை காண வேண்டும்.
மாணவர்கள் இணையதளத்தை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் வாழ்க்கையில் மேம்படமுடியும். மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியினை பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்துகிறோம். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கண்காட்சியை நடத்துகிறோம்.
இதனால் மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படுவதுடன், பொறியியல் படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும். அதேபோல் பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் தேவையான உதவிகளையும் செய்ய உள்ளோம்'' என்றார்.
இதையும் படிங்க: கத்தியுடன் மாணவர்கள் உலா...! போலீஸ் விசாரணை...!