சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், இன்று (டிச.10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
சுமார் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததுடன், வீட்டின் மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது.
அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் உள்ள ஐந்து போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பல சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்துள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு சேதமடைந்த சிசிடிவி கேமராக்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும், வேறு எந்த பகுதியிலாவது போக்குவரத்து சிக்னல்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருவதாக சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயலால் சேதமடைந்த போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை மாற்றி பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழை நீரில் மூழ்கிய தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதை; போக்குவரத்து துண்டிப்பு