சென்னை பெருங்குடி கிராஸ் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(25). இவர் கடந்த ஒரு வருடமாக சொமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். தற்போது, கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வேலைக்கு சென்றாலும் அதிகப்படியான வருமானம் கிடைப்பதில்லை. இதனால், குணசேகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
வறுமையில் வாடி வந்ததனால், சொமேட்டோ பையில் வைத்து கஞ்சா விற்றால் அதிக வருமானம் கிடைக்கும், காவல் துறையிடம் சிக்கவும் வாய்ப்பில்லை என நண்பரின் ஆலோசனைப்படி பெருங்குடி பகுதியில் தெரிந்த நபரிடம் கஞ்சா வாங்கியுள்ளார்.
பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் சொமேட்டோ பையில் கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு உணவை சப்ளை செய்வதுபோல் அடையார், மந்தைவெளி, மயிலாப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக மயிலாப்பூர் தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அடையார் பகுதியில் உள்ள வன்னாந்துறையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குணசேகரனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், இவரிடமிருந்து 10 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இவரை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: தடையை மீறி இயங்கிய தொழிற்சாலை: சீல் வைத்த நகராட்சி ஆணையர்!