விருகம்பாக்கத்தில் பென் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஆதவன் என்பவரும், மேலாளராக சுபாஷ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் நிலத்தின் மீது பணத்தை முதலீடு செய்தால் வருட இறுதியில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்றும், மாதம் தோறும் அதற்கான வட்டி கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்த கொளத்தூரை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் முதலில் ஒரு லட்சம் , பிறகு 14 இலட்சம் என மொத்தம் 15 லட்ச ரூபாயை நிறுவனத்தில் செலுத்தி உள்ளார்.
சுந்தரேசன் நம்புவதற்காக மாதந்தோறும் வட்டி தருவதாகவும், முதலீடு செய்யக்கூடிய பெரிய அளவிலான நிலத்தில் நாம் செம்மரக்கன்று நட்டு அதனை விற்பனை செய்ய உள்ளதாகவும், அதில் உங்களது தொகைக்கு ஏற்ப நிலத்தை எழுதி தருவதாக போலியாக ஆவணங்களை தயார் செய்து கையெழுத்திட்டும் இந்நிறுவனம் கொடுத்துள்ளது.
பின்னர் இரண்டு மாதங்கள் சரியாக வட்டி கொடுத்த இந்த நிறுவனம் பின்பு தராமல் ஏமாற்றியதால் தான் வழங்கிய பணத்தை திருப்பி தருமாறு மேலாளரான சுபாஷிடம் சுந்தரேசன் கேட்டுள்ளார். ஆனால் நிறுவனம் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த சுந்தரேசன் இது தொடர்பாக வளசரவாக்கம் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுந்தரேசன் கொடுத்த வழக்கை சுமூகமாக முடித்து தருவதாக கூறி தனது அலுவலகத்தில் பணிபுரியும் கீர்த்தனா மற்றும் அவரது நண்பரான போலி வழக்கறிஞர் வீரா ஆகியோர் 1.5 லட்சம் ஏமாற்றிவிட்டதாக மேலாளர் சுபாஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதில் சுந்தரேசன் கொடுத்த வழக்கை சுமூகமாக முடித்து வைக்க வளசரவாக்கம் உதவி ஆணையருக்கு 1 லட்சம் மற்றும் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் முடித்துவிடலாம் எனக்கூறி ஊழியர் கீர்த்தனா மற்றும் அவர் அறிமுகம் செய்து வைத்த வழக்கறிஞர் வீரா கூறியதாகவும், இதனை நம்பி 1.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையினருக்கு பணம் தர வேண்டும் என இருவரும் கேட்டதால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விருகம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பென் பவுண்டேஷன் என்ற பெயரில் உரிமையாளர் ஆதவன் மற்றும் மேலாளர் சுபாஷ் ஆகியோர் நிலத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதே போல சுந்தரேசன் 15 லட்சமும், பெண் ஊழியர் கீர்த்தனா 1.5லட்சமும் ஏமாந்ததால் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், வழக்கை திசை திருப்ப சுபாஷ் பொய்யான புகார் அளித்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மேலாளரான சுபாஷை நேற்று(நவ.04) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் உரிமையாளர் ஆதவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது!!