சென்னை: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகே மாவா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியே சந்தேகப்படும்படி ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் மாவா, புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்தி சென்று விசாரணை செய்த்தில், மாவா விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் தாந்தி(30) என்பதும், தாழம்பூர், நேராலம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீட்டை எடுத்து வீட்டில் மாவா தயாரித்து, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்தும் 27 கிலோ மாவா, மாவா தயாரிக்க வைத்திருந்த 3 கிரைண்டர்கள் மற்றும் ஆக்டிவா இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் தாந்தியை நீதிமன்றம் முன் நிறுத்தி சிரையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: CCTV:கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பெட்டிகள் திருடிய நபர்கள்!